கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க - ஆக்கிரமிப்புகளை வியாபாரிகளே அகற்றிக்கொள்ள வேண்டும் : ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, வியாபாரிகள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் அறிவுறுத்தினார்.

கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் மணி, நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், எம்எல்ஏ அன்பழகன் பேசியது: கும்பகோணம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதில், வியாபாரிகள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் நலன் கருதி, மழை மற்றும் வெயில் காலங்களில் வணிக நிறுவனங்களின் முகப்பில் தற்காலிகமாக, எளிதில் அகற்றக்கூடிய 3 அடி நிழற்குடையை அமைத்துக்கொள்ளலாம். இதேபோல, அவ்வப்போது எடுத்து பொருத்திக்கொள்ளும் வகையில், தற்காலிகமாக உலோகத்தால் ஆன 2 அடி உயர படிக்கட்டுகளையும் பயன்படுத்தலாம். இந்தச் சலுகையை மீறி கடை உரிமையாளர்கள் சாலையை ஆக்கிரமித்தால், அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். அதில், நான் குறுக்கிட இயலாது. மேலும், கடைக்கு வெளியே சாலையில் பொருட்களை அடுக்கிவைப்பது, பெயர்ப் பலகை வைப்பது போன்ற செயல்களில் வியாபாரிகள் ஈடுபடக் கூடாது என்றார்.

இந்தக் கூட்டத்தில் வணிகர் சங்க கூட்டமைப்புத் தலைவர் சோழா.சி.மகேந்திரன், செயலாளர் வி.சத்தியநாராயணன், பொருளாளர் எம்.கியாசுதீன், துணைச் செயலாளர்கள் வேதம் முரளி, கே.அண்ணாதுரை, மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கண்ணன், பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ப.அசோகன், நகை வியாபாரிகள் நலச் சங்க செயலாளர் சாருபாலா பாலாஜி, தமிழ்நாடு வர்த்தகர் நலக்கழக பிரதிநிதி எம்.ராமச்சந்திரன், பித்தளைப் பாத்திர வியாபாரிகள் சங்க பிரதிநிதி ஆண்டாள் முரளி, ஹோட்டல்கள் சங்க பிரதிநிதி முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்