பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்கள் மீது மேலும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகர் காலனியைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ்(50), எம்.ஆர்.சுவாமிநாதன்(48). ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என அழைக்கப்பட்ட இவர்கள், நிதிநிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த நிதிநிறுவனத்தில் தாங்கள் முதலீடு செய்த ரூ.15 கோடியை தராமல் ஏமாற்றிவிட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதியர் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து, கும்பகோணம் டபீர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த வெங்கட்ராமன், பார்வதி உட்பட 10-க்கும் மேற்பட்டோர், நிதி நிறுவன அதிபர்கள் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆக.2-ம் தேதி புகார் அளித்தனர். இந்த வழக்கில், நிதிநிறுவனத்தை நடத்தி வந்த எம்.ஆர்.கணேஷ், அவரது மனைவி அகிலா(33), சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன், நிதிநிறுவன பொது மேலாளர் காந்த்(56) உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், அந்த நிதிநிறுவனத்தில் தான் முதலீடு செய்த ரூ.25.5 லட்சத்தை எம்.ஆர்.கணேஷ் தராமல் ஏமாற்றிவிட்டதாகவும், அதைக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் திருச்சியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், எம்.ஆர்.கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago