காட்பாடி-வேலூர் சாலையில் கால்வாயை தூர்வாராமல் மெத்தனம் காட்டி வரும் மாநகராட்சி அதிகாரிகளால் பாரதி நகர் விரிவு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தேங்கியுள்ள கழிவுநீர் பொதுமக்களின் சுகாதார பிரச்சினையை கேள்விக் குறியாக்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தொடங்கியதில் இருந்து இந்த திட்டம் எப்போதுதான் முடியும் என பொதுமக்கள் முகம் சுழிப்பதை பார்க்க முடிகிறது. குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீர், கால்வாய்களை தூர் வாரதது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இதில், வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி பாரதி நகர் விரிவு பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிலத்தில் தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் சுகாதார பிரச்சினையை ஏற்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் ஏளனமாக பதில் அளிப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாரதிநகர் விரிவு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, ‘‘காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் இருந்து சாலையையொட்டி செல்லும் ஒரு கழிவுநீர் கால்வாய் விஜய் சேல்ஸ் ஷோரூம் எதிரே உள்ள கானாற்றில் கலக்கிறது. இந்த கால்வாயை தூர்வார முடியாத மாநகராட்சி அதிகாரிகள், பெட்ரோல் பங்க் அருகில் கால் வாயை வெட்டி காலியாக இருந்த தனியார் நிலத்தின் பக்கம் திருப்பி விட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக அந்த இடத்தில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களால் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
இனியும் கால்வாயை தூர்வாராமல் இருந்தால் பொதுமக்கள் திரண்டு உடைக்கப்பட்ட கால்வாயை நாங்களே அடைப்போம். சாலையில் கழிவுநீர் ஓடும் போதுதான் எங்கு பிரச்சினை உள்ளது என்பதை அதிகாரிகள் தெரிந்துகொள்வார்கள். எங்கள் பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சியரை விரைவில் சந்தித்து வீடியோ, புகைப்படமாக காட்டி முறையிட உள்ளோம்’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago