உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி களின் வரைவுப் பட்டியலுக்கான கலந்தாய்வுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, "தமிழ்நாடு மாநில வார்டு மறுவரையறையின்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021-ம் ஆண்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மீது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளும் கலந்தாய்வு கூட்டத்தை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் புதிய வார்டு மறுவரையறையின் படி ஊராட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டு அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளன.
வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்த ஆலோசனைகள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இக்கருத்துகள் அனைத்தும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வ நாதன் (ஆம்பூர்), தேவராஜி (ஜோலார்பேட்டை), திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago