தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது தொடர்பாக ஜம்மு - காஷ்மீரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 40 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜமா-அத்தே இஸ்லாமிஇயக்கத்தின் மூத்த உறுப்பினர்களின் அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் மூன்றாவது சோதனை இதுவாகும்.
ஜம்மு-காஷ்மீர் போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார் ஆகியோர் என்ஐஏ அதிகாரிகளுடன் இணைந்து தோடா, கிஸ்த்வார், ரம்பன், அனந்த்நாக், கந்தர்பால், புத்காம், ரஜவுரி, ஸோபியான் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
2019-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட ஜமா-அத்தே இஸ்லாமி இயக்கத்தின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, தீவிரவாதத்தால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதை நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஜூலை 10-ம்தேதி, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்ட வழக்கில் 6 பேரை அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜமா-அத்தே இஸ்லாமி இயக்கத்தின் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜமா-அத்தே இஸ்லாமி இயக்கத்தின் மூத்த உறுப்பினர் வீடுகளிலும் இந்த சோதனை நடந்துள்ளது. ஜமா-அத்தே இஸ்லாமி இயக்கத்தின் கந்தர்பால் மாவட்டத் தலைவர் குல் முகமது வார், அமைப்பின் உறுப்பினர்கள் ஜாகூர் அகமது ரெஷி, மெஹ்ராஜ்தின் ரெஷி ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்துள்ளது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago