கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் - 7-வது தேசிய கைத்தறி தின விழா, கண்காட்சி : காஞ்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 7-வது தேசிய கைத்தறி தின விழா மற்றும்கைத்தறி கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலைமேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தவும், கைத்தறி நெசவாளர்களை கவுரவிக்கும் பொருட்டும், 2015-ம்ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும்ஆக. 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக அனுசரிக்கப்பட்டு மத்தியஅரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் தேசிய கைத்தறி தினமாக இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது. உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தி செயல்பாடுகளுக்கு புத்துயிர் ஊட்டுவதை உறுதி செய்வதற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த விழா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியத்துடன் தலா ரூ.50 ஆயிரம் கடனுதவியை வழங்கினார். அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு ரூ.1,000-ம் வீதம் மாத ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

மேலும் 21 கைத்தறி நெசவாளர்களுக்கு அரசு பங்களிப்புடன் கூடிய சேமிப்பு மற்றும்பாதுகாப்பு திட்ட தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு மற்றும் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 5 பேருக்கு எல்க்ட்ரானிக் மெஷின், ஜக்கார்டு லிப்டிங் மெஷின் போன்ற தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க இணை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அ.மகாலிங்கம், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க துணை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் பட்டு மற்றும் காஞ்சிபுரம் டாக்டர் கலைஞர் கருணாநிதி பட்டு உதவி இயக்குநர் வெ.உஷாராணி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பட்டு உதவி இயக்குநர் டி.ஆனந்த், காஞ்சிபுரம், திருவள்ளூர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உதவி இயக்குநர் சீனுவாசன், கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குநர் தெய்வானை, கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் நெசவாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்