ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல்கள் குறித்து - செங்கை மாவட்டத்தில் கருத்து கேட்பு கூட்டம் : கூடுதல் அவகாசம் வழங்க கட்சிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

செங்கை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல்கள் குறித்த கருத்து கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக கருத்துகளை தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கட்சியினர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சிகளில் வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 2,010 வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் தலைமையில் நேற்று கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் செல்வம், மாவட்ட மகளிர்திட்ட இயக்குநர் ஸ்ரீதர்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர் மதுராந்தகம் கே.மரகதம் குமரவேல், செங்கல்பட்டு வரலட்சுமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில், “கடந்த 5-ம் தேதி வரைவு வாக்குச்சாவடி பட்டியல்வெளியிடப்பட்டது. தற்போது 9-ம்தேதி வரை கருத்துகளை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்என தெரிவித்துள்ளீர்கள். இந்தகால அவகாசம் போதாது. எனவே,கூடுதலாக ஒரு வார கால அவகாசம்வழங்க வேண்டும்” என கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில், கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்