கரோனா பரவல், கட்டுப்பாடுகளால் - திருப்பூருக்கு பின்னலாடை வாங்க வரும் கேரள வியாபாரிகளின் எண்ணிக்கை குறைவு :

கரோனா பரவல், கட்டுப்பாடுகள் காரணமாக பின்னலாடைகள் வாங்க திருப்பூர் வரும் கேரள வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்து செயல்படுகின்றன. இவற்றின் உற்பத்தி சார்ந்து பின்னலாடை மொத்த மற்றும் சில்லரை விற்பனைக்கென பெயர் பெற்ற பகுதி காதர்பேட்டை. இங்கு பல நூறு சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை நிறுவனங்கள் செயல்படுகின்றன. முதல் தரம், இரண்டாம் தரம் என தரங்களின் அடிப்படையில் குறைந்த விலையில் பின்னலாடைகள் கிடைக்கும்.

காதர்பேட்டை சந்தைக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள்வந்து மொத்தமாக பின்னலாடைகளை வாங்கி ஏற்றுமதி செய்வதும்,வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதும் நடைபெற்று வருகிறது. இதனால் காதர்பேட்டையில் எப்போதும் ஆடை விற்பனை மும்முரமாக நடைபெறும். காதர்பேட்டைக்கு வரும் வெளி மாநில வியாபாரிகளில் முக்கியப் பங்கு வகிப்பது கேரள வியாபாரிகள்.

கேரளாவில் இருந்து தினமும் ரயில்கள் மூலம் வியாபாரிகள் காதர்பேட்டைக்கு வந்து ஆடைகளை வாங்கி செல்வார்கள். ஆனால், தற்போது கேரளாவில் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தமிழகத்திலும், கேரளாவிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், காதர்பேட்டைக்கு கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதுகுறித்து காதர்பேட்டை பின்னலாடை வியாபாரிகள் கூறும்போது, "நாள்தோறும் கேரளாவில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் துணி மற்றும் பின்னலாடைகளை கொள்முதல் செய்ய வருவார்கள். ஆனால், தற்போது அவர்களது வருகை முற்றிலுமாக இல்லை. இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் கரோனா தொற்று பரவலால் நிலவும் கட்டுப்பாடுகளே இதற்கு காரணம். வியாபாரிகள் வருகை குறைந்துள்ளதால், எங்களுக்கான வழக்கமான வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர டெல்லி, மேற்குவங்கம், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும், கடந்த ஒரு மாதமாக குறைந்துகாணப்படுகிறது. சூடான், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பின்னலாடைகளின் அளவு சராசரியாக உள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE