செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் மாநில ஊரக பயற்சி நிலையத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் 359 கிராம ஊராட்சிகளாகவும், 8 ஊராட்சி ஒன்றியங்கள், 2,679 கிராம ஊராட்சி வார்டுகளாகவும், 154 ஊராட்சி ஒன்றிய வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு மாவட்டஊராட்சி 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக உள்ளாட்சி வார்டுகளுக்கும் மறு சீரமைக்கப்பட்ட எல்லைகள் குறித்த அறிக்கை காஞ்சிபுரம் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் 5 ஊராட்சி ஒன்றியங்களாகவும், 274 ஊராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்ட கவுன்சிலர்கள், 1,938வார்டு உறுப்பினர்கள், 274 கிராம ஊராட்சிகள் ஆகியவை உள்ளன.
இவற்றின் அடிப்படையில் வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும். வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வசதி, மின்சார வசதி, கதவு ஜன்னல்கள், சாய்தள வசதி ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகள் பழுது நீக்கம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்தாலும் மீண்டும் ஆய்வு செய்து அனைத்து பெட்டிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி, செங்கல்பட்டு எஸ்பி பெ.விஜயகுமார், காஞ்சிபுரம் எஸ்பி ம.சுதாகர், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், செங்கல்பட்டு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.செல்வகுமார், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவி, முதன்மை தேர்தல் அலுவலர் க.அருண்மணி, முதன்மை தேர்தல் அலுவலர் கு.தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago