ஆற்காட்டில் தனியார் கல்லூரி நிறுவனர் வீட்டில் சிபிஐ., வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி ரூ.6 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற மோசடி கும்பல் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக ராணிப் பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செல்வகுமார் (52) என்பவர் அளித்துள்ள புகார் மனுவில், ‘‘ஆற்காட்டில் அதிமுக முக்கிய பிரமுகராகவும், தனியார் நிதி நிறுவனம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனராக உள்ளேன். என்னுடைய வீட்டுக்கு கடந்த ஜூலை 30-ம் தேதி ஒரு காரில் 5 ஆண்கள், ஒரு பெண் உட்பட 6 பேர் வந்தனர். தங்களை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டனர். வீட்டில் இருந்த அனைவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
நான் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என்று என்னிடம் கூறினர். அதற்கு நான், ‘ஆண்டுக்கு ரூ.12.50 லட்சம் வருமான வரி செலுத்துகிறேன்’ என தெரிவித்தேன். இதை ஏற்காத அவர்கள் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டவர்கள், என்னிடம் ஒரு கடிதத்தை கொடுத்து ‘வருமான வரி பிரச்சினை எதுவும் இல்லை, எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று கூறி என்னிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக எனது ஆடிட்டர் உதவியுடன் சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு விசாரித்தேன். அவர்கள் யாரும் சோதனைக்கு விரவில்லை என்றும் கூறிவிட்டனர். எனவே, மோசடியாக என்னிடம் இருந்து ரூ.6 லட்சம் பணத்தை பறித்துச்சென்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
செல்வகுமார் அளித்துள்ள புகாரின் பேரில் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டதுடன் ஆற்காடு பகுதியில் உள்ள முக்கிய கண்காணிப்பு கேமராக்களில் மோசடி கும்பல் வந்து, சென்ற கார் குறித்த விவரங்களையும் திரட்டி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago