இரண்டாவது சீசனை வரவேற்கும் வகையில், உதகை ரோஜா பூங்காவில் பல வண்ண ரோஜா மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
சர்வதேச சிறப்பு வாய்ந்த சுற்றுலா நகரான உதகைக்கு ஆண்டு தோறும் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கோடை சீசனான ஏப்ரல், மே மற்றும் இரண்டாவது சீசனான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். கரோனா நோய் தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடை விழா ரத்து செய்யப்பட்டு, பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன.
தற்போது, கரோனா பரவல் குறைந்துள்ளதால், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், மாவட்டங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். விரைவில் பூங்காக்கள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், இரண்டாவது சீசனுக்காக நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக்கள் தயாராகி வருகின்றன.
அதன்படி, தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்டவை புதுப்பொலிவு பெற்று, சுற்றுலாபயணிகளை வரவேற்கத் தயாராகி வருகின்றன.
மலர் நாற்றுகள் நடவு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில்,பெரும்பாலான பூங்காக்களில் இன்னும் மலர்கள் பூக்கத் தொடங்கவில்லை.இந்நிலையில், நூற்றாண்டு ரோஜா பூங்காவில்ரோஜாக்கள் மலரத் தொடங்கியுள்ளன. பல வண்ணங்களில்பல்லாயிரக்கணக்கான ரோஜா பூக்கள் பூத்துள்ள நிலையில்,பிரத்யேகமான பச்சை ரோஜாவும்பூத்துள்ளது. புதுப்பொலிவுடன் பச்சை பசேலென பூங்கா ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதுதொடர்பாக பூங்கா ஊழியர்கள் கூறும்போது, "கரோனா நோய் தொற்று பரவலால் பூங்கா மூடப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது சீசனுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாத்தியிலுள்ள 1,800 செடிகளில், 194 ரக ரோஜாக்கள் பூத்துள்ளன. பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்குகின்றன. பூங்காக்கள் திறக்கப்பட்டால் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கலாம்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago