சித்தூர்- தச்சூர் 6 வழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட போந்தவாக்கம் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர்.
பிற மாநிலங்களில் இருந்து, சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி தனியார் துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாக செல்வதற்காக ஆந்திர மாநிலம், சித்தூர் முதல் திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வரை 6 வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இச்சாலைக்காக தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்காக விவசாயிகளிடம் நிலம் தொடர்பான ஆவணங்களை பெற ஏற்கெனவே வருவாய்த் துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதன்படி, பள்ளிப்பட்டு வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் கடந்த மாதம் 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள் நிலம் தொடர்பான ஆவணங்களை பெற்றனர்.
தொடர்ந்து, கடந்த மாதம்30-ம் தேதி முதல், ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்டகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் ஆவணங்களை பெற ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் தயாராக இருந்து வருகின்றனர்.
படுத்துறங்கும் போராட்டம்
ஆனால், 43 பனப்பாக்கம் கிராமத்துக்கு உட்பட்ட விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஆவணங்களை அளிக்காமல் சென்றனர்.தொடர்ந்து, நேற்று முன்தினம் பேரண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், 6 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு படுத்துறங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் 20-க்கும் மேற்பட்டோர்,கையகப்படுத்தப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு, நிலம் தொடர்பான ஆவணங்களை, அதிகாரிகளிடம் அளிக்கவில்லை.
மாறாக, ‘விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளில் சித்தூர்- தச்சூர் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்து, மனுக்களை அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago