சேத்தியாத்தோப்பு அணை பகுதியில் உள்ள மண் மேடுகளை அகற்றி தூர்வார வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளனர்.
வெள்ளாற்றின் வழியாக கடலில் கலக்கும் வடிகால் நீரை தேக்கி வைத்து பாசனத்துக்கு பயன்படுத்தும் நோக்கோடு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு சேத்தியாத்தோப்பு அணை கட்டப்பட்டது. இதில் ஐந்தரை அடி தண்ணீரை தேங்கி வைக்க முடியும். இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியை பெறுகிறது. மேலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் இது முக்கிய காரணமாக உள்ளது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு வெள்ளாற்றின் தண்ணீரும்,வீராணம் ஏரியின் உபரிநீரும்தான் முக்கிய நீர் ஆதாரங்களாக உள்ளது. தற்போது இந்த அணைக்கட்டின் மேல்பகுதி முழுவதுமாக தூர்ந்து போய் மணல் மேடுகளாக காட்சியளிக்கிறது. இதனால் இதில் போதுமான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "சேத்தியாதோப்பு அணை சேத்தியாத்தோப்பு நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அணைக்கட்டின் முன் பகுதியில் உள்ள மணல் மேடுகளை அகற்றி தூர்வாரினால் அதிக அளவில் தண்ணீரை தேக்க முடியும். விவசாய பாசனத்துக்கும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும்" என்றனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ள மண் மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago