சாயல்குடி அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு - இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது :

By செய்திப்பிரிவு

சாயல்குடி அருகே இளைஞர் வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (38). இவர், கடந்த 2018-ம் ஆண்டு காணாமல் போனதாக அவருடைய அண்ணன் அழகுலிங்கம் அளித்த புகாரின்படி சாயல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 24.12.2018-ல் சாயல்குடி அருகே நரிப்பையூரில் உள்ள பனங்காட்டு பகுதியில் இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் ஒன்றை கைப்பற்றி சாயல்குடி போலீஸார் விசாரணை செய்தனர். மீட்கப்பட்ட அந்த சடலம் காணாமல் போன முத்துவாக இருக்கக் கூடும் என்று கருதி விசாரித்தனர்.

இதனிடையே முத்துவின் உறவினர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

அதன் பேரில் விசாரணை நடத்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் ஓராண்டுக்கு முன்பு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து குற்றத்தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர் டிஎன்ஏ பரிசோதனை செய்து இறந்தவர் முத்துதான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் முத்து, கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் தனது சொத்தை விற்பதாக கூறி முன்பணமாக ரூ.50 ஆயிரம் பணம் வாங்கியதாகவும், ஆனால் சொத்தை எழுதிக் கொடுக்காததால், பணத்தை குணசேகரன் திருப்பி கேட்டுள்ளார்.

முத்து பணத்தை திருப்பி கொடுக்காமல் குணசேகரனை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த குணசேகரன், தனது உறவினர்கள் வேதமாணிக்கம், பால் பவுன்ராஜ், ஜோசப் ராஜன் ஆகியோருடன் சேர்ந்து முத்துவை காரில் அழைத்துச்சென்று மது குடிக்க வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொன்று, பனங்காட்டு பகுதியில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

இதற்கிடையில் முத்துவை கொலை செய்த குணசேகரன் கடந்த ஆண்டு புற்று நோயால் இறந்துவிட்டார்.

அதனையடுத்து போலீஸார் நேற்று முத்துவை கொலை செய்த வேதமாணிக்கம், பால்பவுன்ராஜ், ஜோசப் ராஜன் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்