பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நீண்ட நாட்களாக பூட்டிக்கிடந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆக.1 முதல் 7 வரை தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருப்பது குறித்து, கடந்த ஆக.3-ம் தேதி ‘இந்து தமிழ்' நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து, ஆட்சியர் ப. வெங்கடபிரியா அறிவுறுத்தலின்பேரில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை நேற்று முதல் மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமரிமன்னன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
கரோனா தொற்று பரவிவரும் சூழலில் தாய்மார்கள் சிலர் முகக்கவசம் அணியாமல் அந்த அறைக்குள் சென்று வந்தனர். அவர்கள் மூலம் பிறருக்கும் தொற்று பரவலாம் என்பதால் பாதுகாப்பு கருதி அந்த அறையை பூட்டி வைத்திருந்தோம். தற்போது, கிருமிநாசினியால் தூய்மைப்படுத்தி, பாலூட்டும் அறையை திறந்து வைத்துள்ளோம். அந்த அறைக்கு வரும் தாய்மார்களுக்கு கிருமிநாசினியைக் கொண்டு கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசம் கொடுத்து அணிய செய்தல் போன்றவற்றை செய்வதற்காக பெண் ஒருவரை கண்காணிப்புப் பணிக்காக நியமித்துள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago