கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மேடை தொழில் புரிவோர் நலன் கருதி கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் அனைத்து மதம் சார்ந்த சமூக நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள், தனியார் நிறுவன கூட்டங்களை 50 சதவீத நபர்களுடன் நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக ‘ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன்’ நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேஷன் சங்க தொடக்க விழா வேலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு மாநிலத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். முன்னதாக மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்றார். மாநில பொதுச்செயலர் மணிமாறன், மாநிலப் பொருளாளர் பால்ராஜ், மாநில அமைப்பு செயலர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது, சங்கத்தின் மாநில அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமினார், பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவரை அலங்காரம் ஆகிய பணிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறோம்.
கரோனா ஊரடங்கால் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை தொழில் முடங்கியிருப்பதுடன், இதனை நம்பியுள்ளோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்கள் சந்தித்து வரும் பெரும் சிரமங்களை போக்கிட அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏற்கெனவே பெற்றுள்ள வீட்டுக்கடன், தொழில் கடன், வாகனங்கள் மீதான வங்கிக் கடன்களின் மாத தவணைகள் செலுத்துவதில் சலுகைகளையும், ஊரடங்கு காலத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கோயில், தேவால யங்கள், மசூதிகளில் அனைத்து மதம் சார்ந்த சமூக நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், தனியார் நிறுவன கூட்டங்களை 50 சதவீத நபர்களுடன் நடத்தவும், திருமண மண்டபங்களில் 50 சதவீத நபர்களுடன் திருமணங்கள், அனைத்து விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தவும் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்.
அத்தியாவசிய வேலைகள் செய்வோர் என எங்களை அறிவித்து, கரோனா தடுப்பூசி செலுத்துவதில் எங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்’’. என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் ஆனந்தன், மாவட்டப் பொருளாளர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago