நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 414 அரசுப் பள்ளிகளும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் 4 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ந்துவந்தனர்.
தற்போது இந்நிலை மாறியுள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில் தரமான ஆய்வகங்கள் உள்ளன. அனுபவமுள்ள ஆசிரிய,ஆசிரியைகள் உள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், மடிக்கணினி, காலணி, அட்லஸ், சைக்கிள் வழங்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், இணையம், செல்போன் வசதி இல்லாதவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி உட்பட 11தொலைக்காட்சிகளில் வகுப்புவாரியாக பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
தனியார் பள்ளி மாணவர்களை யும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கவிரும்பும் பெற்றோர், வரும் செப்டம்பர் மாதம் வரை சேர்க்கலாம். தனியார் பள்ளியில் சான்றிதழ் வழங்காவிட்டாலும், சான்றிதழ் இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் சேர்ந்து கொள்ளலாம். மலைவாழ் மக்களில் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்த இயலாத 51 ஏழை, எளிய மாணவர்களுக்கு நீலகிரி ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.49,600 வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago