கரோனா பரவலை தடுக்கும் வகையில் - திருப்பூர் மாவட்டம் முழுவதும் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் : மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இன்றுமுதல், காலை 6 மணி முதல்மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று சில மாவட்டங்களில் அதிகரித்துவரும் நிலையில், மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு இன்றுமுதல் (ஆக.5)சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசியக் கடைகளான பால், மருந்தகம் தவிர, அனைத்து மளிகைக் கடைகள், காய்கறி, பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை செயல்படாது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பன்னடுக்கு வணிக வளாகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது, மாலை 5 முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. கேரளா-தமிழக எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

சோதனைச்சாவடி வழியாக திருப்பூர் மாவட்டத்துக்குள் வரும்பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனைச் சான்றில், கரோனா இல்லை என்றும், கரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணை செலுத்தப்பட்டதற்கான சான்றும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

திருப்பூர் மாநகரத்தில் 33 வணிக பகுதிகள் பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய நகராட்சிப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை தவிர, மற்ற அனைத்து கடைகளும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்