ஆண்டிபட்டி-தேனி அகல ரயில் பாதையில் இன்ஜினை இயக்கி சோதனை : வழிநெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு

மதுரை-போடி இடையே உள்ள மீட்டர்கேஜ் வழித்தடம் அகலப்படுத்தும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஏற்கனவே மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை சோதனை ஓட்டம் முடிந்திருந்த நிலையில் நேற்று ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

துணை தலைமைப் பொறியாளர் வி.சூரியமூர்த்தி தலைமையில் உதவி நிர்வாகப் பொறியாளர் சரவணன், முதுநிலை பிரிவு பொறியாளர் ஜான்பிளமண்ட் உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஆய்வில் ஈடுபட்டது. காலை 11.20-க்கு ஆண்டிபட்டியில் புறப்பட்ட இன்ஜின் 80 முதல் 100 கி.மீ.வேகத்தில் இயக்கப்பட்டு 17 கி.மீ. தூரத்தை 15 நிமிடங்களில் கடந்து தேனி ரயில் நிலையத்துக்கு 11.35-க்கு வந்தடைந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரயிலை இயக்கும் அளவுக்கு தண்டவாளங்களின் தன்மை அமைந்துள்ளது. 2 வாரங்களில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் அபய்குமார் தலைமையில் பெட்டிகளுடன் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்பு சரக்கு மற்றும் பயணிகள் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதத்தில் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயங்க வாய்ப்புள்ளது என்றனர்.

ஆனால் தேனி-போடி வழித் தடத்தில் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் ரயில்களை இயக்க பல மாதங்கள் தாமதமாகும். தேனி மாவட்ட மக்கள் ரயிலைப் பார்த்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று வந்த சோதனை இன்ஜினை வழிநெடுகிலும் ஆர்வமுடன் கையசைத்து வரவேற்பு அளித்தனர். தேனியில் மூன்று முக்கிய இடங்களில் ரயில்வே கேட்டுகள் அமைந்துள்ளதால் நெரிசல் ஏற்படும். எனவே இப்பகுதியில் நடைபெறும் மேம்பாலப் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE