ராமநாதபுரம் ஆதார் பதிவு மையத்தில் - கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு ஆதார் பதிவு மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவும், ஆதாரில் இடம்பெற்ற விபரங்களைத் திருத்தவும் வட்டாட்சியர் அலுவலகங்கள், வங்கிகள், முக்கிய அஞ்சலகங்களில் ‘ஆதார் பதிவு மையங்கள்’ செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பழைய கட்டிடத்திலும் சிறப்பு ஆதார் பதிவு மையம் ஒன்றும் செயல்படுகிறது. இம்மையத்தில் 4 பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர்.

இம்மையத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆதார் பதிவுகளுக்கு வந்து செல்கின்றனர். சிறப்பு ஆதார் மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் கூடுதல் கட்டணம் பெறுவதாகவும், பெறப்படும் கட்டணத்துக்கு ரசீது வழங்குவதில்லை எனவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆதார் மையங்களில் குழந்தைகளுக்கு இலவசமாகவும், முதன்முதலில் ஆதார் எடுக்கும் அனைவருக்கும் இலவசமாகவும் சேவை அளிக்கப்படுகிறது. ஆதார் திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் பெரியவர்களுக்கு ரூ.50-ம், பயோமெட்ரிக் பதிவு மற்றும் திருத்தங்களுக்கு ரூ.100 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சிறப்பு ஆதார் மையத்தில் சேவைகள், கட்டண விபரங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கட்டண விபரங்களை அறிந்து கொள்ள முடியவில்லை

பொதுமக்கள் புகார் குறித்து ஆதார் மைய பொறுப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சிறப்பு ஆதார் மையத்தில் சேவைக் கட்டண விவரங்கள் எழுதி வைக்கப்படும். அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு கூடுதலாக மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்