ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் - காய்கறி, கீரை விற்பனை மையம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை பூங்காக்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, கீரைகள் விற்பனைக்கான சிறப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒன்று வீதம் 11 ஒருங்கிணைந்த தோட்டக்கலை பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பூங்காக்களில் தக்காளி, வெண்டைக்காய், மிளகாய், வெங்காயம், பாகற்காய், புடலங் காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளும், பல்வேறு வகை கீரைகளும் இயற்கை உரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவ்வாறு வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அந்தந்த தோட்டக்கலை பூங்காக்களுக்கு அருகிலேயே பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மண்டபம் ஒன்றியம் வாலாந்தரவை தோட்டக்கலை பூங்காவில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரைச்செல்வி, கணேஷ்பாபு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்