திருவையாறு அருகே அய்யனார் கோயிலில் 7 செப்புக் கலசங் கள் திருடப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறை அடுத்த விளாங்குடியில் ஊர் எல்லையான கொள்ளிடம் தென்கரையில் மஞ்சள் நீர் கூத்த அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கோயில் பூசாரியாக தில்லைஸ்தானத்தை சேர்ந்த யோகேஸ்வரன்(28) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை பூஜை செய்ய கோயிலுக்கு வந்து பார்த்தபோது மதுரைவீரன், நொண்டி முத்துகருப்பு, நோஞ்சான்சுவாமி, கருப்புசுவாமி ஆகிய பரிவார தெய்வங்கள் சன்னதியின் சிறுகோபுரத்தில் முக்கால் அடி உயரத்தில் இருந்த 7 செப்புக்கலசங்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் பிருந்தாதேவியிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர், திருவையாறு காவல் நிலையத்தில் பிருந்தாதேவி புகார் செய்தார். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானமுருகன் மற்றும் போலீஸார் கோயிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும், தஞ்சாவூரியிலிருந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் அமலா கைரேகை பதிவுகளை சேகரித்தார். இதுகுறித்து திருவையாறு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago