மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில், புதன்கிழமைதோறும் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை அழைத்து,பஞ்சாயத்து அட்மிஷன் விழா நடத்தி மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 2021-2022-ம் கல்வி ஆண்டில் சில பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்க்கை இல்லாமலும், 2 முதல் 5-ம் வகுப்பு வரை மிகக் குறைவான எண்ணிக்கையிலும் மாணவர் எண்ணிக்கை உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.வினீத் வெளியிட்ட அறிக்கையில், "5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர்தர வகையில் கற்பித்தலைஆசிரியர்கள் ஏற்படுத்தி, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பள்ளி வளாகம், தலைமையாசிரியர் அறை, வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிப்பறைகளை கிருமி நாசினி யால் தூய்மைப்படுத்தி, பள்ளியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சமச்சீர் மதிய உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலி, கரும்பலகை மற்றும் மின் உபயோக பொருட்கள் முதலியவற்றை சரி செய்து மேம்படுத்த வேண்டும்.மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில், ஒவ்வொரு புதன்கிழமைதோறும் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை அழைத்து பஞ்சாயத்து அட்மிஷன் விழா நடத்தி, மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டி, மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கல்வித் தொலைக்காட்சி வழியாக நடத்தப்படும் பாடங்களை மாணவர்களை கற்க செய்து, அது தொடர்பான பதிவேடுகளை அனைத்து ஆசிரியர்களும் முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், பழுதுபார்க்க வேண்டியிருப்பின் ஆட்சியரின் உதவியை கோரலாம். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளபள்ளிகளின் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்கள், அதற்கான காரணத்தை ஆட்சியரிடம் தெரிவித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago