திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் 15 வேலம்பாளையம் சாலை 15 முக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையையொட்டி, நீதிராஜன் என்பவருக்கு சொந்தமான மதுபானக் கூடம் உள்ளது. இங்கு, சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த நரேந்திரன், சுரேந்திரன், சூர்யா, சிராஜ்தீன் ஆகியோர் நேற்று முன்தினம் மது அருந்த வந்துள்ளனர். கரோனா ஊரடங்கால், மதுபானக்கூடத்தில் மது அருந்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நரேந்திரன் தரப்பினர், நீதிராஜனை கல்லால் தாக்கியுள்ளனர். அப்போது மதுபானக்கூட ஊழியர்கள் பிரபு, தினேஷ், இளங்கோ மற்றும் நீதிராஜன் ஆகியோர் சேர்ந்து நரேந்திரன், சுரேந்திரன், சூர்யா ஆகியோரை தாக்கினர்.
இந்த மோதலில் நீதிராஜன், நரேந்திரன்,சுரேந்திரன், சூர்யா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். காலையில் நடந்த மேற்கண்ட சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கில் சூர்யாவின் சகோதரர் செல்வகுமார், சுரேந்திரனின் சகோதரர் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் அருண்குமார், நவீன் ஆகியோர் மதுபானக்கூடத்தின் பின்பக்க வழியாக வந்து, அங்கு தங்கியிருந்த ஊழியர்களான பிரபு, தினேஷ், இளங்கோ ஆகியோரை கத்தி மற்றும் பாட்டிலால் சராமரியாக தாக்கியுள்ளனர். மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அருண்குமார் (24), பாலாஜி (24), செல்வக்குமார் (25), நவீன்(24), நரேந்திரன் (22), சுரேந்திரன் (23), சூர்யா (23), சிராஜ்தீன் (27) ஆகிய 8 பேர் மீது கொலை முயற்சி, அனுமதியின்றி உள்ளே நுழைதல், பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல்உட்பட 4 பிரிவுகளின் கீழ் அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குபதிந்து, தொடர்புடையவர்களை நேற்று கைது செய்தனர். இதேபோல, மற்றொரு தரப்பினர் அளித்த புகாரின்பேரில், மதுபானக்கூட உரிமையாளர் நீதிராஜனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago