திருமணம், காதணி விழாக்கள் நடத்துவதைப் போல மொய் விருந்து விழா நடத்துவதற்கும் அனுமதிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி வட்டங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மொய் விருந்து விழா நடத்துவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மொய்விருந்து உரிய நேரத்தில் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், நிகழாண்டு கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் திட்டமிட்டபடி ஆடியில் மொய் விருந்து நடத்த முடிவு செய்யப்பட்டு, பல்வேறு இடங்களில் பந்தல் அமைத்தல், பத்திரிக்கை விநியோகம் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக நிகழாண்டும் மொய்விருந்து நடத்துவதற்கு தடை விதித்து ஆட்சியர் கவிதா ராமு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மொய் விருந்து நிகழ்ச்சி நடத்துவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மாங்காட்டில் வரும் 5, 7 ஆகிய தேதிகளில் மொய் விருந்து விழா நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தவர்கள், நேற்று பொதுப்பந்தலில் கூடி ஆலோசனை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: ரூ.10 லட்சம் செலவில் மொய் விருந்து நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆட்சியரின் இத்தகைய திடீர் அறிவிப்பானது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமணம், காதணி போன்ற விழாக்களை, குறைந்த நபர்களை வைத்து நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அதேபோல, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மொய் விருந்து நிகழ்ச்சியையும் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். தொடர்ந்து விழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். திட்டமிட்ட தேதியில் மொய் விருந்து விழா நடத்துவதை ஒத்தி வைக்கிறோம். அதேசமயம், மொய் விருந்து விழா நடத்துவதற்கு அரசு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago