பரிசு விழுந்திருப்பதாக கூறி எஸ்எம்எஸ் அனுப்பி - கரூரைச் சேர்ந்தவரிடம் ரூ.9.20 லட்சம் மோசடி : டெல்லியைச் சேர்ந்த 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

பரிசு விழுந்திருப்பதாக கூறி எஸ்எம்எஸ் அனுப்பி கரூரைச் சேர்ந்தவரிடம் ரூ.9.20 லட்சம் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 3 பேரை கரூர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரூர் வெங்கமேடு சின்னகுளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் (54). கடந்த 2014-ல் இவரது செல்போன் எண்ணுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி எஸ்எம்எஸ் வந்தது.

மேலும், அந்தப் பரிசை பெற, அவர் குறித்த விவரங்களை குறிப்பிட்ட இ-மெயிலுக்கு அனுப்பவும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கண்ணையன் அந்த இ-மெயிலுக்கு அவரது விவரங்களை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின், பரிசுத்தொகைக்கான வருமான வரி, பல நிறுவனங்களிடமிருந்து சான்று பெறவேண்டும் எனக்கூறி டெல்லியில் உள்ள ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பக் கூறியுள்ளனர்.

இதையடுத்து கண்ணையன் ரூ.9.20 லட்சம் அனுப்பியுள்ளார். மேலும் மீண்டும் பணம் அனுப்ப அவர்கள் கூறியதால் சந்தேகமடைந்த கண்ணையன் வங்கியை அணுகி விசாரித்தபோது அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் கண்ணையன் அளித்த புகாரின்பேரில், கடந்த 2015-ல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சிபிசிஐடிக்கு மேல் விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

கரூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் திலகாதேவி தலைமையிலான தனிப்படையினர் டெல்லி சென்று விசாரணை நடத்தி டெல்லி அசாத்பூரை சேர்ந்த முன்வர்நஜார்(26), சோகில் அன்சாரி (24), மகேஷ் (29) ஆகியோரை கடந்த ஜூலை 30-ம் தேதி கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தமிழகம் அழைத்து வந்தனர்.

அவர்களை கரூர் அழைத்து வந்த கரூர் சிபிசிஐடி போலீஸார் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் மூவரையும் நேற்று ஆஜர்படுத்தி கரூர் மாவட்டம் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்