பல்லடம், பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் - தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் : மின்வாரிய கண்காணிப்பு பொறியாளரிடம் விவசாயிகள் மனு

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் உத்தரவுப்படி, விவசாயத்துக்கு எந்தவித தடங்கலுமின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, பல்லடம் மற்றும் பொங்கலூர் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பல்லடம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளரிடம் நேற்று மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானத் தொழிலாக விவசாயம் உள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பொங்கலூர், கொடுவாய், பெருந்தொழுவு, குண்டடம் பகுதிகளிலிருந்து மின்சாரம் சரியாக கிடைப்பதில்லை. மின் விநியோகத்தில் நிலையற்ற தன்மை நீடிப்பதால், வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறி பயிர்கள் தண்ணீரின்றி கருகக்கூடிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

கிராமங்களில் மின்சாரம் இல்லாத சூழ்நிலையில், மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் வழங்குவது தடைபட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. கடந்த பிப்.25-ம் தேதி, அப்போதைய அரசால் அனைத்து விவசாயிகளுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், எங்கள் பகுதிகளில் பகலில் 5 மணி நேரம், இரவில் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆட்சியர், கண்காணிப்புப் பொறியாளர், கோட்டப் பொறியாளர் ஆகியோரிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அரசாணைப்படி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்" என்றனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மின்வாரிய பொறியாளர், விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்