பல்லடம் அருகே அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ராஜேஷ்குமார் (35). 2013-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். கடந்த 30-ம் தேதி பல்லடம் அருகே சிங்கனூர் அரசு மதுபானக் கடை முன்பு சீருடை இல்லாமல் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கட்டிடத் தொழிலாளி பூவரசனை தடுத்து நிறுத்திய காவலர் ராஜேஷ்குமார் மற்றும் அவருடன் இருந்த மர்ம நபர்கள் இருவர், பதிவுச் சான்று புத்தகம், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை கேட்டு மிரட்டியுள்ளனர்.
வாகனத்தின் பதிவுச் சான்று புத்தகம் வீட்டில் உள்ளது என பூவரசன் கூற, வண்டியை நிறுத்திவிட்டு எடுத்து வா எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, இருசக்கர வாகனத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, நடந்து சென்று வண்டியின் புத்தகத்தை எடுத்து வந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்துடன் காவலர் ராஜேஷ்குமார் உட்பட 3 பேரும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக பூவரசன் அளித்த புகாரின்பேரில், பல்லடம் காவல்துறையினர் விசாரித்தனர்.
அவிநாசிபாளையம் காவல்நிலையத்தில் ராஜேஷ்குமார் பணிபுரிந்துவந்ததும், விடுப்பில் இருந்த அவர் சிங்கனூர் மதுபானக் கடைக்கு மது அருந்த வந்ததும், மதுபோதையில் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்பேரில், ராஜேஷ்குமார் மீது திருட்டு வழக்கு பதிந்து, பல்லடம் காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago