கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் செல்போன் சிக்னல் குறைபாடு - ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் அவதி :

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குக்கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது பாப்பாரப்பட்டி ஊராட்சி. இங்கு 18 குக்கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவ, மாணவிகள் செல்போன் மூலம் பயின்று வருகின்றனர். தேர்வு, பயிற்சி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு, வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் தகவல்களை அனுப்பி வருகின்றனர். இதனால் கல்வி கற்கும் மாணவர் களுக்கு செல்போன், இணையதளம் பயன்பாடு அவசியமாக திகழ் கிறது.

இந்நிலையில், பாப்பாரப்பட்டி ஊராட்சியில் செல்போன் சிக்னல்கள் சரியாக கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், மாணவ, மாணவிகள் கடும் அவதியுற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் கூறும்போது, 18 குக்கிராமங்களில் எங்கும் செல்போன் கோபுரம் இல்லாததால் சிக்னல் கிடைப்பதில்லை. அவசர தேவை உள்ளிட்டவைக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி தான் பேசும் சூழ்நிலை உள்ளது. மாணவ, மாணவிகளும் செல்போன் சிக்னலுக்காக நீண்ட தூரம் சென்று சாலையோரம் நின்று ஆன்-லைன் கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது.

பல்வேறு செல்போன் சேவை நிறுவனங்களை அணுகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செல்போன் டவர் அமைக்க, ஊராட்சி சார்பில் இலவசமாக நிலம் வழங்க தயாராக இருக்கிறோம். எனவே செல்போன் கோபுரம் அமைத்து மாணவ, மாணவிகளின் ஆன்லைன் கல்விக்கு உதவ வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE