உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இயங்கி வரும் தனியார் சிமென்ட் ஆலையில் பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆலையின் சமூக மேம்பாட்டு நிதியின் கீழ் கீழப்பழுவூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு ஆலையில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மேலும், இதுதொடர்பாக ஆலை மற்றும் மாவட்ட நிர்வாகங்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், இரவு நேரங்களில் ஆலைகளிலிருந்து அதிகப்படியான நச்சுப்புகை வெளியேற்றப்படுவதால், மக்களுக்கு சரும நோய்கள் ஏற்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினர்.
தகவலறிந்த கீழப்பழுவூர் போலீஸார் அங்கு சென்று, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மக்களின் கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக, ஆலைக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் ஆலையின் உள்ளே செல்ல முடியாமல் ஒரு மணிநேரமாக காத்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago