உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் (1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை) உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பயணத்தில் இருக்கும் பெண்கள் தகுந்த சூழல் இல்லாத காரணத்தால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கக் கூடாது என்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மாவட்டம் தோறும் முக்கிய பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகளை அமைத்துக்கொடுத்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலும் இதுபோன்ற ஒரு அறை திறக்கப்பட்டது. ஆனால், அந்த அறை பெரும்பாலான நாட்கள் பூட்டியேக் கிடக்கிறது.
பச்சிளம் குழந்தைகளுடன் பயணத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு பாலூட்ட இந்த அறையை தேடிப்பிடித்து சென்றால், அங்கு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிருப்தியடைகின்றனர். எனவே, தற்போது உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறையை உரிய பாதுகாப்பு வசதிகளுடன் திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago