திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு, பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் சோதனை முறையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்கு உட்பட்ட ஜார்ஜ் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவு நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை மேற்கொள்ளும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மெத்தனப்போக்கால் பல இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் இருந்து வெடிப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருக்களில் வழிந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 8-வது வார்டு, விசிஎம் தெருவில் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறியது. கழிவுநீர் சாலையில் குட்டைப்போல தேங்க தொடங்கியதால், நகராட்சி அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில், அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் கழிவுநீரை லாரியில் உறிஞ்சி ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். அந்த கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லாமல், 13-வது வார்டுக்கு உட்பட்ட தண்டபாணி கோயில் தெரு அருகேயுள்ள ஏரிக்கரை ஓரத்தில் உள்ள கால்வாயில் திறந்து விட்டுள்ளனர்.
இதனால், அங்கு துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி தலைமையிலான காவல் துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, பொதுமக்கள் கூறும் போது, “ஏரிக்கரை பகுதியில் தான் நகராட்சி குப்பை கொட்டுப்படு கிறது. கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் இங்கு வந்து பார்வையிட்டு அவர்களே குப்பைக்கழிவுகளை அகற்ற உத்தரவிட்டனர்.
குடியிருப்புப் பகுதியில், குப்பைக்கழிவுகளை கொட்டக்கூடாது என நகராட்சி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவரின் உத்தரவு காற்றோடு போய்விட்டது. குப்பைக்கழிவுகளை இங்கேயே கொட்டி எரிக்கிறார்கள். தற்போது, கழிவு நீரையும் குடியிருப்புப்பகுதிக்குள் திறந்து விடுகிறார்கள். இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இதைத் தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதைத்தொடர்ந்து, நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில், பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். .
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago