கரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் உள்ளிட்ட முருகன், அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கோயில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டுத்தோறும் 5 நாட்கள் நடைபெறும் ஆடிக்கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடிக்கிருத்திகை திருவிழாவுக்காக அதிகளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 4-ம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை எனவும், இன்றுமுதல் (ஆக. 2) 4-ம் தேதி வரை எளிமையாக நடைபெறும் தெப்ப உற்சவ நிகழ்வுகள் இணையதளங்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற சிறுவாபுரி, ஆண்டார்குப்பம் முருகன் கோயில்கள், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், , பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில்களில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்றுமுதல் வரும் 3-ம் தேதிவரை 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோயிலுக்கு செல்லும் வழிகள் யாவும் தடுப்புகளால் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டதை அறியாத பக்தர்கள் பலர், நேற்று திருத்தணிக்கு வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலிலும் 2 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நேற்று கந்தசுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago