காஞ்சிரங்காலில் உணவுக்கழிவு மூலம் மின்சாரம் : தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த முடிவு

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே காஞ்சிரங் காலில் உணவுப்பொருள் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரித்து தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் ரூர்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமங்கள் நகர் மயமாக்கப்பட்டு வருகின்றன. அத்திட்டத்தில் சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் ரூ.66 லட்சத்தில் உணவுப்பொருள் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 2 டன் உணவுக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி பகுதிகளில் தினமும் காய்கறி, கோழி, மீன் போன்ற உணவுப்பொருள் கழிவுகள் சேகரிக்கப்படும். பிறகு அவற்றை அரைத்து நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுவர். அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறும். பிறகு அதன்மூலம் ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் தயாரிக்க உள்ளனர்.

இந்த மின்சாரம் முழுவதும் காஞ்சிரங்கால் ஊராட்சி தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஊராட்சி நிர்வாகத்துக்கு மின்கட்டணம் குறையும். இந்த அமைப்பு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வீர பத்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து பொறியாளர்கள் கூறுகையில், ‘உணவுப்பொருள் கழிவுகளை அகற்றுவது உள் ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. அதைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்போது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான மின்சாரம் கிடைப்பதோடு, கழிவு களும் அழிக்கப்படும்,’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்