ஆடிப் பெருக்கு: அவல் இடிக்க திரண்ட மக்கள் :

By வி.சுந்தர்ராஜ்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காவிரி, கொள்ளிடம், வீராணம் கரையோர மக்கள் நெல்லை அவலாக இடித்து படைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அவல் இடிக்க கும்பகோணத்தில் மட்டுமே ஒரே ஒரு மில் இருப்பதால், ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் சமயத்தில் நூற்றுக்கணக்கானோர் கும்பகோணத்துக்கு வந்து நாள் முழுவதும் காத்திருந்து அவல் இடித்துச் செல்வது வழக்கம்.

அதன்படி, ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, குழவடையான், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்குடி, தா.பழூர், மதனத்தூர், நீலத்தநல்லூர், அணைக்கரை, முள்ளங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பெண்களும், ஆண்களும் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள அவல் இடிக்கும் மில்லில் நேற்று அதிகாலை முதலே திரண்டு டோக்கன் பெற்று அவல் இடிக்க நெல்லை கொடுத்தனர்.

இதுகுறித்து அணைக் கரையைச் சேர்ந்த நித்யா கூறிய போது, “ஆடிப் பெருக்கு விழாவில் பழங்கள் வைத்து படையலிட்டாலும், அவல்தான் முக்கியம். நெல்லை முதல்நாள் 12 மணி நேரம் ஊறவைத்து, பின்னர் தண்ணீரை வடிகட்டியபின் அவல் மில்லில் கொடுத்து, அவலாக இடித்து வாங்கிச் செல்வோம்” என்றார்.

இதுகுறித்து அவல் மில் பணியாளர்கள் கூறியபோது, “கடையில் அவல் விற்றாலும், மக்கள் தாங்களே சொந்தமாக அவல் தயாரிப்பது தற்போதும் நடைமுறையில் உள்ளது. ஆடிப் பெருக்குக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அவல் தயாரிப்பு தொடங்கி விடும். இதற்காக, இரவு பகலாக தொழிலாளர்கள் ஷிப்டு முறையில் வேலை பார்த்து வருகிறோம். நெல்லை ஊறவைத்து கொடுத்துவிடுவார்கள். நாங்கள் அதை வறுத்து, பின்னர் மில்லில் இடித்துக் கொடுப்போம். இதற்காக கிலோவுக்கு ரூ.8 கூலியாக வாங்கிக் கொள்கிறோம்” என்றனர்.

ஆடிப்பெருக்கு விழாவுக்கு கொள்ளிடம் கரையோர கிராமங்களில் சீதனமாக அவல் வழங்கப்படுவதுண்டு. நீர்நிலைகள், கோயில்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட அரசு கரோனாவை காரணம் காட்டி தடை விதித்தாலும், வீடுகளிலேயே அவ்விழாவை குடும்பத்துடன் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்