திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கூலிப் படையினர் 4 பேர் தஞ்சாவூர் அருகே நேற்று கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், பிரகாசம் மற்றும் போலீஸார் உமாசங்கர், சிவக்குமார், அருண், அழகு, கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸாரைக் கண்டதும், அந்த வீட்டிலிருந்து தப்பியோட முயன்றவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் நாங்குநேரியை அடுத்த புளியங்குளம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஊசிபாண்டியன்(37), பாளையங்கோட்டையை அடுத்த மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சிவா என்ற நாராயணன்(26), நாங்குநேரி வாகைக்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த சிவகுரு மகன் தீபக்ராஜா(27), தச்சநல்லூர் மேலக்கரை மேற்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(34) ஆகி யோர் என்பதும், இவர்கள் அனைவரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
மேலும், இவர்கள் 4 பேர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கண்ணன் என்பவர் கடந்த ஜூலை 12-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் வந்து தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நடுக்காவேரியைச் சேர்ந்த தினேஷ்(24) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago