வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கரோனா 3-வது அலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வார நிகழ்ச்சி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் நேற்று தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்ததால், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதனால், மகிழ்ச்சியடைந்த பொது மக்கள் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். இருந்தாலும், அரசு கூறிய அறிவுரைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற தவறிய பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை மறந்து ஒரே இடத்தில் கூட்டம், கூட்டமாக கூடி வருகின்றனர்.
இதனால், கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப் புள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கரோனா 3-வது அலை குறித்த விழிப்புணர் வும், கரோனா தடுப்பு நடவடிக் கையை மேற்கொண்டு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தேவையான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியது.
அதன்பேரில், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கரோனா 3-வது அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதன்படி, வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு வார நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நோய் தடுப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், எஸ்.பி., செல்வகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்தி கேயன் ஆகியோர் வழங்கினர்.
இதையடுத்து, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்தி கேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, திருப்பத்தூர் நகராட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் கரோனா 3-வது அலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு வார நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, கரோனா தடுப்பு உறுதிமொழியை ஆட்சியர் அமர் குஷ்வாஹா வாசிக்க அதனை நகராட்சி, வருவாய், காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் பின்தொடர்ந்து ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சிறு வியாபாரிகள், பொதுமக்கள் ஆகி யோரிடம் கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
இதில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி, திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, டிஆர்ஓ தங்கைய்யா பாண்டியன், நகராட்சி ஆணை யாளர் ஏகராஜ், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் பங்கேற்று கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago