உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டுவருவதில் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டுமென, குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காணொலி காட்சி வாயிலாக ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் பேசும்போது, "தாராபுரம் வட்டத்தில் உப்பாறு அணைக்கு உயிர் தண்ணீர் வழங்க வேண்டும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. உப்பாறு அணைக்கு நிரந்தரத் தீர்வாக, அரசூர் ஷட்டரிலிருந்து உப்பாறு அணை வளைவிலும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்தை உடனடியாககொண்டுவர வேண்டும். பருவமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து உள்ளதால், உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டு வீணாகிறது. எனவே, நாட்டுக்கல்பாளையத்தில் இருந்து 6 கி.மீ. தூரம் மட்டும் வாய்க்கால் வெட்டினால், உப்பாறுஅணைக்கு தண்ணீர் கொண்டுவர முடியும். உப்பாறு விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
தாராபுரம், மூலனூர், குண்டடம் ஒன்றியங்களில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம், நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்தில் இருந்து, ஒன்றரை மணி நேரம் வரை தடை செய்யப்படுகிறது. இதேபோல, வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரமும், இரவு நேரங்களில் இரண்டு முறை தடை செய்யப்படுகிறது. காங்கயம், வெள்ளகோவில் ஆகிய பிஏபி கடைமடை பகுதிகளில் இருக்கும் விவசாய நிலங்களுக்கு, 7 நாள் நீர் திறப்பு என்ற விதிமுறையை அமல்படுத்த வேண்டும். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, விவசாயிகளிடமிருந்து 84 மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டு, அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பல்லடம்,பொங்கலூர் ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்காக கூட்டுறவு தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி உருவாக்கப்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான கறவை மாடுகள் வாங்க, டிராக்டர்கள் கொள்முதல் செய்ய, கிணறு வெட்ட என விவசாயத் தேவைகளுக்கு மத்திய கால மற்றும் நீண்ட கால கடனாகவும் விவசாயிகளுக்கு வழங்கி வந்தது. இதனால் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித கடனும் வழங்குவதில்லை. நகைக்கடன் மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்" என்றனர்.
ஆட்சியர் சு.வினீத் பேசும்போது, "முந்தைய கூட்டங்களில் விவசாயிகள் வழங்கிய மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, துறை வாரியாக ஆட்சியர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும், கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
வேளாண் இணை இயக்குநர் மனோகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago