கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் போக நெல் சாகுபடிக்காக நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி அணை மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலமும், கிருஷ்ணகிரி அணையின் மூலம் 9012 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல்போக பாசனத்துக்கும், ஜனவரி முதல் மே மாதம் வரை 2-ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நிகழாண்டில் கடந்த மே மாதம் அறுவடையை முடித்த விவசாயிகள் மழை மற்றும் அணைகள் நீர் திறப்பை நம்பி எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த மாதம் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் முதல்கட்டமாக பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணை களில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் கீழ் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகள், நெல் நடவு, நிலத்தை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அணை பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் கூறும்போது, அணையில் இருந்து வழக்கமாக ஜூலை மாதங்களில் நீர் திறப்பு இருக்கும். நிகழாண்டில் ஒரு மாதம் தாமதமாக நடவு பணிகளை தொடங்கி உள்ளோம். நெல் நாற்று நடவுகள், நிலத்தை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆட்கள் பற்றாக்குறை இருந்ததால், இயந்திரங்களின் உதவியுடன் பணிகள் மேற்கொண்டோம். கரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தற்போது மீண்டும் நடவு, நிலத்தை சீர் செய்தல் உள்ளிட்ட பணி களில் மனித சக்தியை பயன்படுத்துகிறோம். முதல் போக நெல் நடவு பணிகள் தாமதமாக தொடங்கினாலும் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago