மழைநீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய்களைத் தூர்வார ரூ.8 கோடியில் `ரொபாட்டிக் எக்ஸ்கவேட்டர்’ இயந்திரத்தை வாங்க மதுரை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக நகராட்சி நிர்வா கத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. இந்தக் கால்வாய்களில்
புதர் மண்டி, குப்பைகள் நிறைந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கால்வாயைச் சுற்றிலும் குடியிருப்போர், தனியார் நிறுவனத்தினர் குப்பைகளைக் கொட்டுகின்றனர். ஆண்டுக்கணக்கில் தூர்வாரப்படாமல் புதர் மண்டி, மழைக் காலங்களில் மழைநீர், கழிவு நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. தேங்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மதுரையில் கொசுத் தொல்லை அதிகரிக்கிறது. தொற்று நோய் பரவி மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்தக் கால்வாய்களில் தூய்மைப் பணியாளர்கள் தூர்வாருவது என்பது சவாலானதாக உள்ளது. மேலும், உச்ச நீதிமன்றமும் கழிவு நீர் கால்வாய்களை மனிதர்களைக் கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இதனால், மதுரை மாநகராட்சி மழைநீர்க் கால்வாய்கள், கழிவுநீர்க் கால்வாய்களை எளிதாகத் தூர்வார `ரொபாட்டிக் எக்ஸ்கவேட்டர்’ (Robotic Excavater) இயந்திரம் ரூ.8 கோடியில் வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த இயந்திரத்தை வாங்க மதுரை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத்தின் (சிஎம்ஏ) அலுவலகத்துக்கு அனுமதியை கோரியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் கூறுகையில், அனுமதிக்காக காத்தி ருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் `ரொபாட்டிக் எக்ஸ்கவேட்டர்’ இயந்திரம் வாங்கப்படும்.
இந்த இயந்திரம் மூலம் சிறிய, பெரிய கால்வாய்களை எளிதாகத் தூர்வாரலாம். நகரில் உள்ள கால்வாய்களை புதர் மண்டவிடாமல் தொடர்ந்து இந்த இயந்திரத்தைக் கொண்டு தூர்வாரி மழைநீர், கழிவு நீர் தேங்க விடாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago