மலர்களில் இருந்து வண்ணம் எடுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு வருவாய் ஏற்படுத்தி தர வேண்டும் என ரோஜா உட்பட மலர்கள் சாகுபடிகள் மேற்கொள்ளும் விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் 70-க்கும் மேற்பட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதேபோல் ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம் போன்ற கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மலர் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாடு, கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மலர்களில் இருந்து வண்ணம் எடுக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு வருவாய் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தேசிய தோட்டக்கலைத்துறை வாரிய இயக்குநர் பாலசிவபிரசாத் கூறும்போது, தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 75 சதவீதம் செயற்கை மலர்கள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சீன பிளாஸ்டிக் மலர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ரூ.20 கோடி அளவிற்கு பிளாஸ்டிக் மலர்கள் பயன்படுத்துவதால், தமிழகத்தில் உள்ள 10 லட்சம் மலர் விவசாயிகள், சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் மலர்களை தமிழக அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மலர்கள் விற்பனையை பொறுத்தவரை வருடத்திற்கு 3 மாதங்கள் விற்பனையாகாமல் இருக்கும். அவ் வாறான நேரங்களில் மலர்களிலிருந்து வண்ணம் எடுக்கும் தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மலர்களில் இருந்து எடுக்கப்படும் வண்ணங்கள், மருந்து, மாத்திரை மற்றும் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
வெளி நாடுகளில் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களுக்கு மலர்களில் இருந்து எடுக்கப்படும் வண்ணங்கள் பயன்படுத்துவதால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகம் உள்ளது. தமிழக அரசு ஓசூரை மையமாக கொண்டு மலர்களில் இருந்து வண்ணம் எடுக்கும் தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago