கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் கரோனா நிவாரண தொகை வழங்கப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 20 பேருக்கு ஓய்வூதிய உதவித்தொகையை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார். அப்போது ஆட்சியர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் கட்டுமான தொழிலாளர்கள் 1,20,845 நபர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் 61,619 நபர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் 2,254 நபர்கள் என மொத்தம் 1,84,718 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். 50,253 தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கரோனா உதவித்தொகையாக ரூ.10.05 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் நலவாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.34.86 கோடி மதிப்பில் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி,இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய உதவித்தொகைகள் வழங்கப் பட்டுள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து ஊரக வாழ்வாதார புத்தாக்க திட்டத்தின் கீழ், கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்து, 4 பயனாளிகளுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், தொழிலாளர் நல வாரியம் உதவி ஆணையர் வெங்கடாசலபதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன், தாட்கோ மேலாளர் யுவராஜ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago