கட்டிகானப்பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் :

கட்டிகானப்பள்ளியில் ரூ.24 லட்சம் மதிப்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.24 லட்சம் மதிப்பில் சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் குப்பையைக் கொட்டி அரைக்கப்படுகிறது. பின்னர் அவற்றை அங்குள்ள 15 தொட்டிகளில் கொட்டி தண்ணீர் ஊற்றப்படுகிறது. மேலும் அவற்றில் மண் புழுவும் விடப் படுகிறது.

இந்த தொட்டியில் அதிகப்படியான தண்ணீர் தொட்டியின் அடியில் இருந்து வெளியேறுமாறு அமைக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் குப்பை மக்கி உரமாக மாற்றப்படுகிறது. இந்த உரங்களை ஒரு குறிப்பிட்ட விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த உர மையம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. ஊராட்சித் தலைவர் காயத்திரிதேவி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் வெங்கடாஜலம், கூடுதல் இயக்குநர் கோமதி, பி.டி.ஓ.,க்கள் உமா மகேஷ்வரி, தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குநர் பெரியசாமி உர மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் உர மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளர்கள் செல்வம், தமிழ்செல்வி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் சம்பங்கி, கல்பனா, ஊராட்சித் துணைத் தலைவர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE