நில அளவைத்துறை அலுவலகத்தில் தீ : ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நில அளவைத் துறை தொழில்நுட்ப பிரிவு அலுவல கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடம் 2-வது தளத்தில் செயல்பட்டு வரும் நிலஅளவை துறையின் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியிலிருந்து புகை கிளம்பியது. அப்பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த நில அளவை தொடர்பான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் இயந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

அதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நில அளவைத்துறை உதவி இயக்குநர் கந்தசாமி, ராமநா தபுரம் டிஎஸ்பி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள், தடய அறிவியல் துறையினர், கேணிக்கரை போலீஸார் தீ விபத்து நடந்த அலுவலகத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர். மின் கசிவால் தீ விபத்து நடந்ததா? அல்லது வேறு காரணமா என போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நிலஅளவைத்துறை உதவி இயக்குநர் கந்தசாமியிடம் கேட்டபோது, இச்சம்பவம் குறித்து நில அளவைத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.

இதே கட்டிடத்தில் நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழ்தளத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. எனவே, முக்கிய அலுவலகங்கள் இருக்கும் இந்த கட்டிடத்துக்கு போதிய எண்ணிக்கையிலான காவலர்களை நியமித்து கண்காணிப்பதற்கு உயர் அதிகாரிகள் நடவடிக்ைகை எடுக்க வேண்டும் என்று அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்