விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என கிருஷ்ணகிரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22-ம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.
மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பென்னாகரம் ஜி.கே.மணி, பர்கூர் டி.மதியழகன், ஓசூர் ஒய்.பிரகாஷ், தளி டி.ராமசந்திரன், தருமபுரி எஸ்பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயி களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேளாண்மை துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது குறித்து விவசாயிகள் தங்களது கருத்துகளை உழவன் செயலி மூலம் பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாய சங்க பிரதிநிதிகள் மாங்கூழ் ஆலை, தோட்டக்கலை பல்கலைக்கழகம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தினை வலுப்படுத்துதல்,தென்னை கொள்முதல் நிலையம், நீரில் கரையும் திரவ உரம், தோட்டக்கலை மேம்பாடு, சந்தைப்படுத்துதல், 100 நாள்வேலை ஆட்களை விவசாய பணிகளுக்கு உட்படுத்துதல்,அனைத்து விவசாய விளைப்பொருட்களுக்கும் உரிய ஆதார விலை வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இவை அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
விவசாயிகளின் எதிர்பார்ப்பு களை அறிந்து அதற்கான புதிய திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவை காரணம் காட்டி வேளாண் பட்ஜெட்டிற்கான நிதி எந்த சூழ்நிலையிலும் குறைக்கப்படாது. ஒவ்வொரு துறைக்கும் தேவையை அறிந்து அதற்கேற்ப அரசு செயல்படுகிறது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டங்களையும் அரசு அனுமதிக்காது. 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள வேளாண் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் தூசி தட்டி எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதனை தொடர்ந்து தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் ஈராண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்குபயிற்சி நிறைவு சான்றிதழ்களை வழங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் செங்குட்டுவன்,முருகன், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago