கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.18 கோடியை உடனடியாக சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் கரும்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குருங்குளத்தில் உள்ள சர்க்கரை ஆலையின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் பி.ராமசாமி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.திருப்பதி, செயலாளர் பி.கோவிந்தராஜ், பொருளாளர் அர்ச்சுணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 2020-21 அரைவை பருவத்துக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு உண்டான நிலுவைத் தொகை ரூ.18 கோடியை உடன் வழங்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் விலையை நடப்பு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.
சர்க்கரை ஆலைப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பதை நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும். கரும்பு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி கையில் கரும்புகளுடன் முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், துணைத் தலைவர் கலியபெருமாள், துணை பொருளாளர்கள் அண்ணாதுரை, ராஜ்குமார் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago