பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கும் ஆலையை நிறுவ வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நேற்று சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கலந்தாய்வுக் கூட்டம், ஆலையின் தலைமை நிர்வாகி என்.கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், ஆலையின் தலைமை நிர்வாகியிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கும் ஆலையை நிறுவ வேண்டும். ஆலையில், தற்போது உள்ள இணை மின் திட்டத்தில் கூடுதலாக 35 மெகாவாட் மின் உற்பத்திசெய்யும் திறன் உள்ள கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ. 4,000 என்ற அறிவிப்பை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
இணைமின் திட்டத்துக்கு விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட பங்குத்தொகைக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பங்குப் பத்திரம் வழங்கப்படவில்லை. இதில், தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு பங்குப் பத்திரம் வழங்க வேண்டும்.
2020-21-ம் ஆண்டுக்கு கரும்பு வெட்டியதற்கான முழுத் தொகையையும் இந்த ஆண்டு அரைவைப் பருவம் தொடங்குவதற்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
வேட்டக்குடி கரும்புக் கோட்டத்துக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும். சர்க்கரை விற்பனையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை விலக்கிக்கொண்டு, மாநில அரசின் அதிகாரத்தில் விடவேண்டும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அதிகப்படியான பால் உற்பத்தியாளர்கள் இருப்பதால் நிர்வாக வசதிக்காக அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களை திருச்சி ஒன்றியத்திலிருந்து தனியாகப் பிரித்து புதிதாக ஆவின் பால் ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இக்கூட்டத்தில், தலைமைக் கரும்பு அலுவலர் ரவி, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, தலைமைக் கணக்காளர் ஜான்பிரிட்டோ, தலைமைப் பொறியாளர்(பொ) மாதவன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மு.ஞானமூர்த்தி , பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.வேணுகோபால், காங்கிரஸ் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆ.பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago