பெரம்பலூர் அருகே நேற்று கிரஷர் லாரி மோதி விவசாயி உயிரிழந்ததால், உரிமமின்றி செயல்படும் கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் ராமச்சந்திரன்(35). விவசாயியான இவர் நேற்று காலை கே.எறையூரிலிருந்து பெரம்பலூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கே.எறையூர் அருகே தனியார் கிரஷர் நிறுவனத்துக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையறிந்த கே.எறையூர் கிராம பொதுமக்கள், கே.எறையூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இந்தப் பகுதியில் உரிய உரிமமின்றி செயல்படும் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர் நிறுவனங்களை மூட வேண்டும். அதிக பாரம் ஏற்றிச் செல்லும், அதிவேகமாக செல்லும் லாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் உயிரிழந்த ராமச்சந்திரனின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினர். தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார், “சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, விபத்துக்கு காரணமான டேங்கர் லாரியின் ஓட்டுநர் நக்கசேலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் கதிரேசன்(24) என்பவரை மருவத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago