பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள் இன்று தொடக்கம் : ஆய்வுக்கு முன்பே கிடைத்த சங்க கால அணிகலன்கள்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணிகள் இன்று(ஜூலை 30) தொடங்குகின்றன. அங்குள்ள

மேற்பரப்பில் சங்ககால அணிகலன்கள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியை அளிப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டை, கொத்தளங்களோடு உள்ள பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு செய்தவற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்குகின்றனர்.

அதற்காக இடம் தேர்வு செய்தல் போன்ற முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தன. அதன்படி, இனியன், தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், அகழாய்வு பணி மேற்பார்வையாளர் ஆர்.அன்பழகன், வேப்பங்குடி ஊராட்சித் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர் நேற்று அகழாய்வு நடைபெற உள்ள இடத்தில் மேலாய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சங்க காலத்தைச் சேர்ந்த பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா, பழுப்பு, கருப்பு, இளமஞ்சள் போன்ற வண்ணங்களில் மணிகள் போன்றவையும், கருப்பு, ஊதா வண்ண வளையல்களின் உடைந்த பகுதிகள், உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட இரும்புத் துண்டுகள், நிறமற்ற கண்ணாடி படிகம், குறியீடுகளுடன்கூடிய பானை ஓடுகள் போன்றவையும் கிடைத்துள்ளன. மேலும், தட்டு, கிண்ணம், கலயங்களின் உடைந்த பகுதிகள், உருக்கு உலையின் அடிமானங்கள், உலோகக் கழிவுகளும் கிடைத்துள்ளன.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியது: அகழாய்வுக்கு முன்னதாக, அதன் மேற்பரப்பில் இத்தகைய சங்க காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே, தொழில்நுட்பக் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவின் அடிப்படையில் அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இன்று (ஜூலை 30) அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் அகழாய்வு பணி நடைபெற்றிருந்தாலும்கூட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தற்போது முதல் முறையாக அகழாய்வு செய்யப்பட உள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்