பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் வனத் துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள சந்தன மரங்களின் எண்ணிக்கை மற்றும் மரங்களின் வயது குறித்து கணக்கெடுக்கும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் மலையடிவாரத்தில் மர்ம நபர்கள் சிலர் தனியார் மற்றும் வனத் துறைக்கு சொந்தமான நிலங்களிலிருந்து 10-க்கும் மேற்பட்ட சந்தனமரங்களை வெட்டிக் கடத்திச் சென்றுவிட்டதாக ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவர், ஆட்சியர் அலுவலகத்திலும், பெரம்பலூர் காவல் நிலையத்திலும் அண்மையில் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்தில் சந்தன மரங்களை வெட்டிச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர். மேலும், மாவட்ட வன அலுவலர் குகனேஸ் உத்தரவின்பேரில், ரேஞ்சர் குமார் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, சந்தன மரங்கள் கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் வனத் துறைக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்துள்ள சந்தன மரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வயது குறித்து கணக்கெடுக்கும் பணியில் வனத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பின் முடிவில், திருடப்பட்ட சந்தன மரங்களின் எண்ணிக்கை முழுமையாக தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago